கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி – 4.3.2020 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்.

கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை போலுப்பள்ளியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப் பணிகள் துவக்க விழா, புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை 4.3.2020 புதன் கிழமை மாலை 3 மணியளவில் சிறப்புடன் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையேற்பார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் புதியதாகக் கட்டப்படவுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் விழாப் பேருரையாற்றுவார்கள்.

மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.கே.பி.அன்பழகன், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள். இவ்விழாவில், தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம், இ.ஆ.ப. அவர்கள் வரவேற்புரையாற்றுவார்கள். மேலும், இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி, புதுடில்லி, செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, அரசு தலைமைக் கொறடா, தலைவர், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், தலைவர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ளார்கள். இறுதியாக, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சு.பிரபாகர், இ.ஆ.ப. அவர்கள் நன்றியுரையாற்றுவார்கள்.