விரைவாகப் பணம் திருப்பித் தருவதற்கான மின்னஞ்சல்களைத் தொந்தரவாகக் கருதக் கூடாது: மத்திய நேரடி வரிகள் வாரியம்


வரி வருவாய் நடைமுறைகளைப் பயன்படுத்தி, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் நிலுவையைப் பெறுவதில் வருமான வரித்துறை நெருக்குதல் தருகிறது என்று கூறப்படும் புகார்கள் தவறானவை என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) இன்று கூறியுள்ளது. இவை முழுக்க முழுக்க ஆதாரமற்றவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக செலுத்தப்பட்ட வரியைத் திரும்பப் பெறுவதற்குத் தகுதியுடைய அனைவருக்கும் தெளிவுபடுத்தும் மின்னஞ்சல்களை அனுப்பி வருவதாகவும், வரி நிலுவை வைத்திருப்போருக்கும் மின்னஞ்சல்கள் வருவதால், அதை தொந்தரவு தரும் செயலாக தவறாகக் கருதக்கூடாது என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது. கம்ப்யூட்டர் மூலம் தானாக அனுப்பப்படும் இந்த மின்னஞ்சல்கள், வரி செலுத்தக் கூடிய 1.72 லட்சம் பேருக்கும் அனுப்பப்படும். தனிநபர்கள், இந்து கூட்டுக் குடும்பங்கள், நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப்கள் உள்ளிட்ட சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள் ஆகியவையும் இதில் அடங்கும். எனவே ஸ்டார்-அப் நிறுவனங்கள் மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு, தொந்தரவு தரப்படுவதாகக் கூறுவது முழுக்க முழுக்கத் தவறான தகவல் என்று வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

திருப்பித் தர வேண்டிய தொகையில், ஏதும் நிலுவைகள் இருந்தால் அதை கழித்துக் கொள்வதை உறுதிசெய்ய வேண்டியுள்ளது. முகமறியாமல் நடைபெறும் இந்தத் தகவல் பரிமாற்றம், பொதுமக்கள் பணத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்தின் 245வது பிரிவின் கீழ் இந்த மின்னஞ்சல்கள் தானாகவே அனுப்பப்படுகின்றன. வரி செலுத்த வேண்டியவர் ஏதும் நிலுவை வைத்திருந்தால், இந்த மின்னஞ்சல்கள் அனுப்பப்படும். வரி செலுத்துபவர், இந்த நிலுவைத் தொகையை ஏற்கெனவே செலுத்தி இருந்தாலோ அல்லது வருமான வரித்துறை உயர் அதிகார அமைப்புகளால் இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தாலோ, அதுபற்றி மின்னஞ்சல்கள் மூலம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அதன் மூலம் பணம் திருப்பித் தரும் போது, ஏதும் பிடித்து வைக்கப்படாமல், உடனடியாக அவை திருப்பித் தரப்படும்.

நிலுவையில் உள்ள தொகையைக் கழித்துக் கொள்வது தொடர்பாக, வரி செலுத்துவோரிடம் தகவலைப் பெறுவதற்கான கோரிக்கையாகத்தான் இதுபோன்ற தகவல்கள் அனுப்பப்படுகின்றன என்றும், இதை வரி வசூலுக்கான நோட்டீஸ் என்றோ, வருமான வரித்துறையினரின் நெருக்குதல் செயல்பாடு என்றோ கருதக்கூடாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. பணம் திருப்பித் தரும் போது, நிலுவை ஏதும் இருந்தால் அதைக் கழித்துக் கொள்வதன் மூலம் மக்களின் பணத்தைப் பாதுகாக்க வேண்டியது வருமான வரித்துறையின் கடமையாக உள்ளது என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு இடையூறு இல்லாத வரிச் சூழலை அளிக்க வேண்டும் என்பதற்காக 30 ஆகஸ்ட் 2019 தேதியிட்ட சுற்றிக்கை 22/2019-ஐ வெளியிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு வரி மதிப்பீடு கணக்கிடுவதற்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதுடன், பிரிவு 56(2)(viib) -இன் கீழ் சேர்ப்புகள் தொடர்பான வரி நிலுவைகள் பற்றி பரிசீலிக்கப்படாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. நிலுவையை வருமானவரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உறுதி செய்யும் வரையில், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் வேறு எந்த வருமான வரி கேட்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. மேலும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் குறைகளைத் தீர்க்கவும், வரி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் ஸ்டார்-அப் பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துபவரிடம் உள்ள நிலுவையை வசூலிப்பதற்கான விரிவான நடைமுறைகளை விளக்கியுள்ள மத்திய நேரடி வரிகள் வாரியம், நிலுவையை செலுத்தி விடுவதற்கோ அல்லது வருமான வரித்துறையில் அதன் தற்போதைய நிலை பற்றிய தகவலைத் தெரிவிக்கவோ ஒரு வாய்ப்பு அளிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. எவ்வளவு நிலுவை உள்ளது என்பதை சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்க இதுபோன்ற மின்னஞ்சல்கள் அனுப்பப் படுகின்றன. அவற்றை செலுத்தவோ அல்லது ஏற்கெனவே செலுத்தியிருந்தால் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவோ அல்லது வேறு ஏதும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் அதன் நிலை பற்றி தகவல் தெரிவிக்கவோ இது ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

நிலுவைத் தொகையை செலுத்தியாகி விட்டதா அல்லது வேறு ஏதும் உயர் அதிகார அமைப்பால் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதா என்ற தகவலை வரி செலுத்துபவர் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. அதன் மூலம் அந்த செயல்பாட்டை நிறுத்தி வைத்து, திருப்பிச் செலுத்தும் தொகையில் அதைக் கழித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளது.

நிலுவைத்தொகையை ஈடுகட்டுவதற்கான தற்போதைய நடைமுறைகளைப் பின்பற்றி, இதுபோன்ற இமெயில்கள், வரி மதிப்பீட்டுக்கு உரிய 1.72 லட்சம் பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும், அதில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் அடங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் அதிகார அமைப்பு ஏதும் இடைக்காலத் தடை விதித்திருந்தால், அந்தத் தகவலைத் தெரிவித்தால், நிலுவையை எந்தத் தாமதமும் இல்லாமல் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் இதுபோன்ற தகவல்களை வருமான வரித் துறைக்குத் தெரிவிக்காமல், தவறான தகவலைப் பரப்புவது சிபிடிடி-யின் சுற்றறிக்கை 22/2019-ன் நோக்கத்துக்கு முரண்பட்டது, அது முழுக்க முழுக்க நியாயமற்றது என்று சிபிடிடி கூறியுள்ளது.

ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இந்த இமெயில்களுக்கு கூடிய விரைவில் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. திருப்பித் தர வேண்டிய தொகை ஏதும் இருந்தால், உரிய நடைமுறைகளின்படி அளிப்பதற்கான நடவடிக்கைகளை வருமான வரித் துறை எடுப்பதற்கு இது உதவியாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின் தொடர்ச்சியாக 2020 ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிட்ட அறிவிக்கையின்படி, சுமார் 14 லட்சம் கணக்குகளுக்கு ரூ.9,000 கோடிக்கும் மேற்பட்ட தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. தனி நபர்கள், இந்து கூட்டுக்குடும்பங்கள், உரிமையாளர்கள், நிறுவனங்கள், கார்ப்பரேட்கள், ஸ்டார்ட்-அப்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் நிறுவனங்கள் ஆகியவை இதில் அடங்கும். கோவிட்-19 நோய்த்தொற்று பரவும் சூழ்நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் இந்தத்தொகை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்துபவர்களிடம் இருந்து தகவல் வராததால், பல நேர்வுகளில் பணம் திருப்பித் தரப்படாமல் உள்ளது. தகவல்கள் வந்தவுடன், கூடிய விரைவில் அந்தப் பணம் திருப்பித் தரப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *