நலிவடைந்த நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு கொரோனா கால நெருக்கடியில் நிதியுதவி


ஒரு கலாச்சாரத்தின் பெருமையையும் பழமையையும் எடுத்துச் சொல்வது நாட்டுப்புறக் கலைகளே ஆகும்.  வடதமிழகத்தில் தெருக்கூத்து என்றால் நடுப்பகுதியான மதுரை சார்ந்த வட்டாரங்களில் ஸ்பெஷல் ட்ராமா, திருநெல்வேலி, நாகர்கோவில் பகுதிகளில் வில்லுப்பாட்டு என நாட்டுப்புற கலைகள் பிராந்தியங்களுக்கு ஏற்ப மாறுபடும்.  நிகழ்த்துக் கலைகள் என்று அழைக்கப்படும் இந்த நாட்டுப்புறக் கலைகள் தொன்மையானவை.  பரம்பரை பரம்பரையாக இந்தக் கலைகள் தங்களைப் புதுப்பித்துக் கொண்டே வருகின்றதன.  கதை சொல்லும் நாட்டார் கலைகள், ஆட்டம் பாட்டமான நாட்டார் கலைகள், சடங்கோடு தொடர்புடைய நாட்டார் கலைகள் என நாட்டுப்புறக் கலைகள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றன.  ஆனால் இந்தக் கலைகளை நிகழ்த்தும் கலைஞர்களின் நிலைமையோ பரிதாபமான நிலையிலேயே இருக்கிறது.

அமைப்பு சாராத தொழிலாளிகள் என்ற பிரிவில் அடங்குகின்ற இந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் வேஷம் கட்டினால்தான் வாழ்க்கை என்று காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.  இந்தக் கலைகள் எல்லாம் திருவிழாக்களோடு தொடர்புடையவை ஆகும்.  திருவிழா ஒன்றில் சடங்கிற்காக பம்பை அடிப்பார்கள்; தெருக்கூத்து நடத்துவார்கள்; சாமி ஊர்வலத்தோடு நாதசுரம், மிருதங்கம் வாசிப்பார்கள்.  திருவிழாக் காலம்தான் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு உற்சாகமான காலம் ஆகும்.  அதிலும் தமிழ்நாட்டில் பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மூன்று மாதங்கள்தான் (மார்ச் 15 – ஜுன் 15) இந்தக் கலைஞர்கள் வருவாய் ஈட்டும் காலமாகும். இப்போது சம்பாதிப்பதை வைத்துத்தான் இவர்கள் மற்ற மாதங்களை ஓட்டுவார்கள்.

இன்று நாட்டுப்புறக் கலைஞர்கள் கொரோனாவால் பரிதாபப்பட்டு நிற்கிறார்கள்.  தொடர்ச்சியான ஊரடங்கும் மக்கள் ஒன்று கூடக் கூடாது என்று போடப்பட்டுள்ள தடையும் இவர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி விட்டது.  அதிலும் மிகச் சரியாக இவர்கள் வருவாய் ஈட்டும் இந்தக் காலகட்டத்தில் கொரோனா வைரஸ் இவர்கள் முன்னே மிகப் பெரிய தடையாக வந்து நின்றுள்ளது.

திருவிழாக்கள் இல்லை. சடங்குகள் இல்லை.  இசைக்கும் கலைக்கும் இடமே இல்லை.  என்ன செய்வார்கள் இந்த நாட்டுப்புறக் கலைஞர்கள்?  வேதனையில் வாடிக்கொண்டு இருக்கும் அவர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான நிதி உதவியாக ரூபாய் 1,000 கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது.  பிரதம மந்திரி கரீப் கல்யான் நிவாரணத் தொகுப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த உதவி இவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கொரோனாவால் வேறு எந்தப் பிரவினரையும் விட அதிக அளவில் பாதிக்கப்பட்ட இந்த கலைஞர்களுக்கு நிதி உதவியாக கொடுக்கப்பட்ட 1,000 ரூபாயே பேருதவியாக இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் சில நாட்டுப்புறக் கலைஞர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம். இவர்கள் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்கள் ஆவர்.  பொதுவாக அனைவரும் இந்த உதவித் தொகையானது போதாது. அதிகப் பணம் வேண்டும்.  தொடர்ந்து சில மாதங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள். அவர்களின் கண்ணீர் கருத்துகள்:

ஷாலினி, வீதி நாடகக் கலைஞர், நங்காத்தூர்

17 வருடங்களாக வீதி நாடகங்களில் நடித்து வருகிறேன்.  ஆயிரம் ரூபாய் கொடுத்ததற்கு  அரசுக்கு நன்றி.  ஊரடங்கு நீடிக்கிறதால வாழ்வாதாரமே இல்லை. கூடுதலா பணமோ பொருளோ கொடுத்து உதவினால் தான் வாழ முடியும்.

வீரப்பன், பம்பைக் கலைஞர், குண்டலிப்புலியூர்

ஊரடங்கு உத்திரவால் 1000 ரூபாய் கிடைத்துள்ளது. நன்றி.  எனக்கு பம்பை வேலை மட்டும்தான் தெரியும்.  புள்ளகுட்டிகளை வைத்துக்கொண்டு என்ன செய்யறதுன்னு தெரியல. இன்னும் உதவிகளை எதிர்பார்க்கிறேன்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *