சேலம் மாவட்டம் தலைவாசலில் 9.2.2020 அன்று சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழா மற்றும் விவசாயப் பெருவிழா – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பங்கேற்பு


சேலம் மாவட்டம் தலைவாசலில் 9.2.2020 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சர்வதேச தரத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டி விவசாய பெருவிழா, கண்காட்சி மற்றும் கருத்தரங்கை துவக்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரையாற்றுவார்கள். இவ்விழாவிற்கு மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை ஏற்பார்கள். மாண்புமிகு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு.உடுமலை கோராதாகிருஷ்ணன் அவர்கள் முன்னிலை வகிப்பார்கள். தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம், இ.ஆ.ப. அவர்கள் வரவேற்புரையாற்றுவார்கள். வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் வேளாண்மைத் துறை திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப. அவர்கள் விவசாய பெருவிழா குறித்து விளக்கவுரையாற்றுவார்கள். முதன்மைச் செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, மருத்துவர் கே.கோபால், இ.ஆ.ப., அவர்கள் திட்ட விளக்கவுரையாற்றுவார்கள் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சி.ஆர்.ராமன், இ.ஆ.ப. அவர்கள் நன்றியுரையாற்றுவார்கள். இவ்விழாவில், அமைச்சர் பெருமக்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி புதுடெல்லி, நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், மாநில கூட்டுறவு வங்கித் தலைவர்மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.

10.2.2020, 11.2.2020 ஆகிய இரண்டு நாட்களும் சேலம் மாவட்டம் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மாவட்டங்களிலிருந்தும் மாணவ-மாணவிகள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு கால்நடைகளை பற்றிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதோடு கால்நடை கல்லூரிகளில் அவர்கள் சேர்வது தொடர்பாக பேராசிரியர்களும், கல்வியாளர்களும் வருகை தந்து எடுத்துரைக்க உள்ளார்கள். அதே போன்று வேளாண்மைத் துறையின் மூலம் வேளாண் துறையைச் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்களும் வருகை தந்து வழிகாட்ட உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக சுமார் 20,000 மாணவ-மாணவிகள் வருகை தர உள்ளனர். கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ஆடு வளர்ப்பு குறித்து கருத்தரங்கங்களும் நடைபெற உள்ளது. இக்கருத்தரங்கில், கால்நடைகளை வளர்க்கும் முறை, கால்நடைகளைபயன்படக்கூடிய நவீன இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் உள்ளிட்டவையும் இடம் பெற உள்ளன. ஒவ்வொரு அரங்கும், ஒவ்வொரு விதமாகவும், மிக பிரம்மாண்டமாகவும் அமைக்கப்பட உள்ளது. 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் மூலமாக சுமார் 3 இலட்சம் பொதுமக்கள் வருகை தந்து கண்காட்சியை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 15,000 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் தலைவாசலில் 9, 10, 11.2.2020 ஆகிய 3 நாட்கள் நடைபெறும் இந்த விழாவிற்கு வருகை தந்து வேளாண்மை, கால்நடை ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதால் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை, சென்னை – 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *