டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது! தொல்.திருமாவளவன் போராட்டம் அறிவிப்பு!


மே7 அன்று டாஸ்மாக்- மதுக்கடைகளைத் திறந்து கொரோனா பரவலுக்குத் தமிழக அரசே துணை போவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு தனது முடிவைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, நாளை மே 6 ஆம் தேதி காலை 11 மணி அளவில் தமிழ்நாடு முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டம் அவரவர் வீட்டின் முன்னே நின்று ‘டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டாம்’ என முழக்கம் எழுப்பும் வகையில் நடைபெறுமென அறிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் மே7ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. பொது மக்களிடையே எழுந்த எதிர்ப்பின் காரணமாக சென்னையில் மட்டும் கடைகள் இயங்காது என்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியிருக்கிறது. பேரிடர் காலத்தில் தமிழக அரசின் இந்த முடிவு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழ்நாட்டில் நாளொன்றுக்கு சுமார் 70 லட்சம் பேர் மது அருந்துகிறார்கள் என அரசு தரப்பிலேயே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் குடி நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் எல்லோருமே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு உடல் கோளாறுகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். மது அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகவும் அதனால் அவர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று மிக எளிதில் தாக்கும் எனவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

நோய்த் தொற்றுக்கு ஆளாகிறவர்களில் ஏற்கனவே உடல் பலவீனமாக இருப்பவர்களே உயிர் இழக்கிறார்கள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த குடிநோயாளிகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் உயிர் இழக்கக் கூடிய ஆபத்து உள்ளது. அப்படி பார்த்தால் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதன்மூலம் சுமார் ஒரு கோடி பேரின் உயிருக்கு தமிழக அரசு உலை வைத்துள்ளது.

மத்திய மாநில அரசுகள் கடைபிடித்து வரும் முழு அடைப்பின் காரணமாக ஏற்கனவே வாழ்வாதாரம் இல்லாமல் அன்றாட உணவுக்கே கையேந்தும் நிலைக்கு பெரும்பாலான மக்கள் ஆளாகி உள்ளனர். இந்தச் சூழலில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் ஏழை எளிய மக்களின் மிச்சம் மீதி உள்ள வாழ்வாதாரமும் பறிக்கப்படக்கூடிய ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால் குடும்ப வன்முறை பெருகி அவர்கள் தேவையற்ற கடனாளிகள் ஆவார்கள்.

பேரிடர் காலத்தில் தமிழக அரசு மேற்கொள்ளும் இந்த மக்கள் விரோத முடிவைக் கண்டித்தும், டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது என வலியுறுத்தியும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நாளை நடைபெறவுள்ள அறப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம். தொல்.திருமாவளவன், நிறுவனர்- தலைவர்,விசிக.

Source: கு.கா.பாவலன், மாநில செய்தி தொடர்பாளர்,விசிக.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *