வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு


தலைமை செயலாளர் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது…

கொரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன. அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, அம்முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்ப்பதற்கு, தமிழ்நாடு முதலமைச்சர், தலைமைச் செயலாளர் தலைமையில், அரசு உயர் அதிகாரிகள், துறை தலைமை அதிகாரிகள், ஜப்பான், கொரியா, சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளைச் சார்ந்த தொழில் கூட்டமைப்பினர்கள் அடங்கிய, முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக் குழு (Special Investment Promotion Task Force) ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பணிக்குழுவின் முதல் கூட்டம் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
கொரோனா பாதிப்பு காரணமாக வெளிநாடுகளில் இருந்து வெளியேறும் நிறுவனங்களை ஈர்க்க வியூகம்.
வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பு.
தமிழ்நாட்டில் எந்தெந்த நிறுவனங்கள் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளது மற்றும் அந்த நிறுவனத்திற்கு அரசின் உதவி போன்றவை இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இக்குழு ஒரு மாதம் கடந்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள், கொரிய தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் ஜங்ஹி ஹான், தாய்வான் தொழில் கூட்டமைப்பின் இயக்குநர் தாவே ஸாய், ஹிண்டாய் நிறுவன மேலாண்மை இயக்குநர் எஸ் எஸ் கிம், தொழிலதிபர்கள் திருமதி. மல்லிகா சீனிவாசன் (USIBC), சக்திவேல் (IACC), ஸ்ரீதர் வேம்பு (ZOHO), ஹரி தியாகராஜன் (CII), பொன்னுசாமி (CII), பீட்டர் நிக்கல்சன் (Cheyyar SEZ) வைபவ் மித்தல் (Mahindra), குருராஜ் (WISTRON), அர்ஜித் சென் (FLEX), சீனிவாசன் சுந்தரம், (Lincoln Electric), USISPF மற்றும் Enterprise Singapore அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.