உள்நாட்டுத் தேவைக்குப் போதிய அளவு / உபரியாக இருப்பு வைக்கப்பட்டிருப்பதையடுத்து, ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடை நீக்கம்.

மலேரியா எதிர்ப்பு மருந்தான, ஹைட்ராக்சி குளோரோ குயின்,  செயல்திறன் மிக்க மருந்துப் பொருள்கள் மற்றும் அதனை ஒத்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.  இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம்,  மருந்தியல் துறை, வெளியுறவுத்துறை, வர்த்தகம் மற்றும் தொழில்துறை, வருவாய்த்துறை மற்றும் பிற துறைகளின் பிரதிநிதிகள் அடங்கிய, அமைச்சகங்களுக்கு இடையிலான உயரதிகாரமளிக்கப்பட்ட குழு  03.06.2020 அன்று நடத்திய ஆலோசனையின் அடிப்படையில்,  ஹைட்ராக்சி குளோரா குயின் (செயல்திறன்மிக்க மற்றும் அதனை ஒத்த தயாரிப்புகள்)  மாத்திரைகள் ஏற்றுமதி மீதான தடையை நீக்குமாறு, மருந்தியல் துறை பரிந்துரைத்திருந்தது.  அதன் பேரில்,  வெளி வர்த்தகத்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் தடை நீக்கம் தொடர்பான முறையான அறிவிப்பை  நேற்று (18.06.2020)  வெளியிட்டுள்ளது.  

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது,   மார்ச் – மே, 2020 காலகட்டத்தில் (கோவிட்-19 காலகட்டம்) ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 2-லிருந்து 12-ஆக  அதிகரிக்கப்பட்டதுடன், நாட்டின் மொத்த ஹைட்ராக்சி குளோரோ குயின் உற்பத்தித் திறனும்,  மும்மடங்காக, அதாவது,  ஒரு மாதத்திற்கு  10கோடி ( சுமார்) மாத்திரைகளிலிருந்து 30 கோடி (சுமார்)  மாத்திரைகளாக உயர்த்தப்பட்டது.    தற்போது, இந்தியா, உள்நாட்டுத் தேவையை விட உபரியாக ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை இருப்பு வைத்துள்ளது. 

கோவிட்-19 பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான தேவையைப் பூர்த்தி செய்துவரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எச்.எல்.எல். லைஃப்கேர் நிறுவனத்திற்கு, 200 மில்லி கிராம் சக்திகொண்ட 12.22 கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகளை வழங்கியிருப்பதன் மூலம்,  மத்திய சுகாதாரம்  மற்றும் குடும்ப நலத்துறையின் தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.   தற்போது,  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையிடம், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்திசெய்ய தேவையான அளவை விட உபரியாகவே,  ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள்  இருப்பு உள்ளது.   இது தவிர,  200 மில்லி கிராம் சக்தி கொண்ட 7.58கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள்  மாநில அரசுகள்,  பிற நிறுவனங்கள் மற்றும்  மத்திய அரசின் மருந்துப்பொருள் தயாரிப்புப் பொதுத்துறை நிறுவனங்களின் கூட்டமைப்பு / மக்கள் மருந்தகங்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக விநியோகிக்கப்பட்டுள்ளது.   மேலும்,  உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய ஏதுவாக, 200 மில்லி கிராம் திறன்கொண்ட 10.86 கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள், உள்ளூர் மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.  ஆக மொத்தம்,   30.66 கோடி ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள் (200மி.கி. திறன் கொண்டவவை) நாட்டின் உள்நாட்டு சந்தைத் தேவைக்கு வழங்கப்பட்டுள்ளன.   எனவே, உள்நாட்டு ஹைட்ராக்சி குளோரோ குயின்  மாத்திரைத் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.  அத்துடன்,  ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளைத் தயாரிக்கும் பெரிய உற்பத்தியாளர்கள்,  2020 ஜுன் மாதத்தில் , உள்நாட்டுச் சந்தைக்கு 5 கோடி மாத்திரைகளை விநியோகிக்க உள்ளனர்.  

இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரியும், உள்நாட்டுச் சந்தையில், ஹைட்ராக்சி குளோரோ குயின் மற்றும் பிற மருந்துப் பொருள்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதா என அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறார்.    25 மற்றும் 26 மே,  2020-இல் நடத்தப்பட்ட மாதிரி ஆய்வில், கோவிட்-19க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளுக்கு அருகிலுள்ள மருந்துக் கடைகளில், 93.10 சதவீதம் ஹைட்ராக்சி குளோரோ குயின் மாத்திரைகள் இருப்பில் உள்ளது தெரியவந்துள்ளது. 

எனவே,   ஹைட்ராக்சி குளோரோ குயின்  (செயல்திறன்மிக்க மற்றும் அதனை ஒத்த தயாரிப்புகள்) மீதான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  எனினும், அதே வேளையில்,  ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மற்றும் பிரிவுகள் தவிர்த்த ஹைட்ராக்சி குளோரோ குயின் உற்பத்தி செய்யும் உள்நாட்டு நிறுவனங்கள்,   அவற்றின் மொத்த உற்பத்தியில் 20 சதவீத மாத்திரைகளை உள்ளூர் மருந்துக்கடைகள் மற்றும் உள்ளூர் வர்த்தகத்திற்கு விநியோகிக்க வேண்டும்.   இது  2020 ஜுன் மாதத் தேவையைவிட அதிகம் ஆகும்.    மாநில அரசுகள்,  எச்.எல்.எல்.நிறுவனம் மற்றும் பிற பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்குத்  தேவையான அளவை விட அதிகமாகவே வழங்கப்பட்டுள்ளது.  எனவே, அனைத்து உற்பத்தியாளர்களும்,  எச்.எல்.எல். நிறுவனம், மாநில அரசுகள் அல்லது அரசின் பிற நிறுவனங்களுக்குத் தேவைப்படும் மாத்திரைகளை முன்னுரிமை அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும்.   இந்த நிபந்தனைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு,  இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரி அறிவுறுத்தப்பட்டுள்ளார்.  

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …