2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்திர காசநோய் அறிக்கையை வெளியிட்டார் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன்.

2019இல் அறிவிக்கப்பட்ட காசநோயாளிகள் எண்ணிக்கை 24.04 லட்சம்; 2018 ஆம் ஆண்டைவிட 18 சதவீதம் அதிகம்

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மெய்நிகர் நிகழ்ச்சி மூலம் 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்திரக் காசநோய் அறிக்கையை இன்று வெளியிட்டார். அத் துறையின் இணை அமைச்சர் திரு. அஸ்வினி குமார் சௌபேயும் உடனிருந்தார். கூட்டுக் கண்காணிப்பு லட்சிய நோக்குத்திட்டம் (ஜே.எம்.எம்.) அறிக்கை, காசநோயாளிகளுக்கு நிக்சாய் (NIKSHAY) நடைமுறையின் கீழ் நேரடியாகப் பணப்பயன் பரிமாற்றம் (DBT) செய்வதற்கான கையேடு, பயிற்சித் தொகுப்பு மற்றும் NIKSHAY பத்திரிகையின் காலாண்டு செய்தி இதழ் ஆகியவற்றையும் அவர்கள் வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள முக்கிய சாதனைகளில் பின்வரும் அம்சங்கள் அடங்கியுள்ளன:

 • 2019ஆம் ஆண்டில் 24.04 லட்சம் காசநோயாளிகள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளனர். 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 14 சதவீதம் அதிகமாகும்.
 • NIKSHAY  நடைமுறையின் மூலம் காசநோயாளிகளை ஆன்லைன் மூலம் அறிவிக்கை செய்வதில் ஏறத்தாழ முழுமையான நிலை எட்டப்பட்டுள்ளது.
 • காணாமல் போகும் நபர்களின் எண்ணிக்கை 2.9 லட்சமாகக் குறைந்துள்ளது. 2017இல் இது 10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தது.
 • தனியார் துறையினர் மூலமான அறிவிக்கை 35 சதவீதம் அதிகரித்து 6.78 லட்சமாக இருந்தது.
 • மூலக்கூறு நோய் கண்டறிதல் வசதி எளிதில் கிடைக்கும் காரணத்தால், குழந்தைகளுக்குக் காசநோய் பரிசோதனை செய்யும் அளவு 2019இல் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018இல் இது 6 சதவீதம் அதிகரிப்பாக இருந்தது.
 • அறிவிக்கை செய்யப்பட்ட அனைத்து காசநோயாளிகளுக்கும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்வதற்கான வசதி 2018இல் 67 சதவீதம் என்ற நிலையில் இருந்து 2019-இல் 81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
 • அறிவிக்கை செய்யப்பட்ட நோயாளிகளில் சிகிச்சை வசதிகள் விரிவாக்கம் காரணமாக, குணம் பெறுபவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018இல் 69 சதவீதமாக இருந்த குணம் பெறுவோர் அளவு, 2019இல் 81 சதவீதமாக உயர்ந்துள்ளது.
 • நாட்டில் ஏறத்தாழ அனைத்து கிராமங்களிலும் சிகிச்சை அளிப்பதற்கு 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட DOT மையங்கள் உதவிகரமாக உள்ளன.
 • தி்ட்டத்தின் நேரடி பணப்பரிமாற்றத் திட்டங்களின் வசதிகளை NIKSHAY விரிவுபடுத்தியுள்ளது –
 1. காசநோயாளிகளுக்கான நிக்சாய் போஷான் யோஜ்னா (NPY)
 2. சிகிச்சைக்கு ஆதரவளிப்போருக்கு ஊக்கத்தொகை
 3. தனியார் சிகிச்சையாளருக்கு ஊக்கத் தொகை மற்றும்
 4. அறிவிக்கை செய்யப்பட்ட மலைவாழ் பகுதியைச் சேர்ந்த காசநோயாளிகளுக்குப் போக்குவரத்துக்கான ஊக்கத் தொகை

வருடாந்திரக் காசநோய் அறிக்கையை வெளியிட்ட டாக்டர் ஹர்ஷ் வர்த்தன், இதில் ஈடுபட்டுள்ள அனைவரின் கூட்டு முயற்சிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார். “பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் செயல்துடிப்பு மிக்க தலைமையிலான இந்திய அரசு, 2025க்குள் நாட்டில் இருந்து காசநோயை விரட்டிவிடுதல் என்ற நீடித்த வளர்ச்சி இலக்குகளை  (sustainable development goals – SDGs) எட்டுவதில் உறுதியாக இருக்கிறது என்றும், உலக நாடுகளுக்கான இலக்கிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக நாம் அந்த இலக்கை எட்டுவோம் என்றும் அவர் கூறினார். உயர் நோக்கம் கொண்ட அந்த இலக்கை எட்டுவதற்கு, இத் திட்டத்திற்கு தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

“ஆண்டு அறிக்கையில் உள்ள விவரங்களின்படி, நாட்டில் காசநோய் கட்டுப்பாட்டில் பாராட்டுக்குரிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. தகுதிநிலைப் பட்டியல் தயாரித்திருப்பது, தங்கள் இலக்குகளை எட்டுவதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மேலும் சிறப்பாக செயல்பட ஊக்குவிப்பதாக இருக்கும். மருத்துவப் பரிசோதனை நிலையங்களின் வசதிகளையும், நோய் கண்டறிதல் வசதிகளையும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் விரிவுபடுத்தியுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதற்கு, காசநோய் சிகிச்சை சேவைகளை விரிவுபடுத்துவது மற்றும் சுகாதாரத் துறையைத் தாண்டி காசநோய்க்கு எதிரிகளாக உள்ள மற்ற துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டியது அவசியமாக உள்ளது. இந்த அனைத்து முயற்சிகளும் குறிப்பிடத்தக்க பலன்களை அளித்து வருகின்றன” என்று அமைச்சர் தெரிவித்தார்.

Source: Press Information Bureau – Govt. of India

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …