ஆவின் நிறுவனத்தின் 24 மணிநேர நுகர்வோர் சேவை பிரிவு தொலைபேசி எண்: 7358018430- ஆவின் நிர்வாகம்.


ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆவின் விற்பனை சாதனை குறித்து வெளியிடப்பட்டுள்ளது.

“ஆவின்” எனும் வணிகப் பெயர் கடந்த நாற்பது ஆண்டுகளாக தமிழகத்தின் அனைத்து குடும்பங்களிலும் பிரபலமாக உச்சரிக்கப்பட்டு வரும் பெயராக உள்ளது. கிராம அளவில் தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், மாவட்ட அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் மற்றும் மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 4.5 லட்சம் பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் மூலம் தமிழகத்தில் நாளொன்றுக்கு 39 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 25.00 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு விற்பனை செய்து வருகிறது. இந்திய அளவில் கூட்டுறவு அமைப்பின் கீழ் பால் உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது.

சென்னையில் நாளொன்றுக்கு சராசரியாக 13 லட்சம் லிட்டர் பாலும் தமிழகத்தின் பிற பகுதிகளில் 11.60 லட்சம் லிட்டர் பாலும் விற்பனை செய்யப்படுகிறது. பால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் சென்னை மாநகர் பகுதி மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாதாந்திர பால் அட்டை விற்பனை செய்யப்பட்டுவருகிறது. அனைத்து ஒன்றியங்களிலும் விற்பனை மேலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்கள் மூலமாக அனைத்து உணவகங்கள், சூப்பர் மார்கெட்டுகள், தேனீர் விடுதிகள் மற்றும் மளிகை கடைகள் ஆகிய இடங்களில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஆவின் பால் விற்பனையானது 30.06.2020 அன்று இதுவரை கண்டிராத உயர்ந்த அளவாக 12.03 லட்சம் லிட்டர் என்ற புதிய இலக்கினை எட்டியுள்ளது.
கொரோனா தாக்கத்தின் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள இந்த நெருக்கடியான சூழ்நிலையிலும், தொடர்ந்து பால் வழங்கும் பொருட்டு, தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி உரிய நேரத்தில் கிடைத்திட, பொது மக்களுக்கு தேவைப்படும், இடங்களில் தற்காலிகமாக ஆவின் கடைகள் அமைத்தும் நடமாடும் பாலகங்கள் ஏற்படுத்தியும் பால் விற்பனை ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் அனைவரும் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்களை வாங்கி பயன்பெறுமாறு ஆவின் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.

ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்கள் பொது மக்களுக்கு தங்குதடையின்றி கிடைத்திட ஏதுவாக அதிகப்படியான எண்ணிக்கையில் சில்லறை விற்பனையாளர்கள் ஆவின் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பால் அட்டை விற்பனையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக தமிழகம் முழுவதும் கடுமையான கொரோனா தொற்று உள்ள நெருக்கடியான இக்காலகட்டத்திலும் சென்னை மற்றும் தமிழகமெங்கும் தினசரி ஆவின் பால் விற்பனை அளவு 22.50 லட்சம் லிட்டரில் இருந்து 25.00 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. அதை போலவே பால் பொருட்களின் விற்பனையும் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

பொது மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைக்காக, மளிகை பொருட்கள் கொள்முதல் செய்யும் மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்கெட்டுகள் ஆகிய இடங்களிலிலும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைத்திட ஏதுவாக ஆவின் முகவர் நியமன விதிகளில் ஆவின் நிறுவனம் மாற்றம் செய்துள்ளது. மேலும் இதற்கான வைப்புத் தொகை ரூ. 1000/- ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 495 புதிய விற்பனையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா நோய் தடுப்பு காலத்தில் தேவையான சத்துள்ள பால் கிடைக்கும் வண்ணம் அனைத்து பகுதிகளிலும் முகவர்களை நியமித்து ஆவின் நிறுவனம் மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.

மேலும் கடந்த ஆண்டு சுமார் 5800 கோடி விற்று முதல்((Turn Over)) செய்துள்ளது. ஆவின் நிறுவனம், மேலும் அதனை அதிகரிக்க தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த புதிய உயரத்தை அடைய ஒத்துழைப்பு நல்கிய அனைத்து கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மொத்த பால் விற்பனையாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், அனைத்து மாவட்ட கூட்டுறவு துணைப் பதிவாளர்கள், ஆணையாளர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும், மாவட்ட கூட்டுறவு ஊழியர்கள், இணைய பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள், ஏனைய ஒப்பந்த பணியாளர்கள், வாகன ஒப்பந்ததாரர்கள், பணியாளர்கள் மற்றும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் ஆவின் நிறுவனம் தெரிவித்துக்கொள்கிறது. மேலும், வரும் காலங்களிலும், பால் உற்பத்தியாளர்களுக்கும் மற்றும் நுகர்வோர்களுக்கும் கூடுதல் சேவைகள் செய்ய ஆவின் நிறுவனம் தயாராக உள்ளது என்பதனை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறது.

ஆவின் நிறுவனத்தின் 24 மணிநேர நுகர்வோர் சேவை பிரிவு தொலைபேசி எண்: 7358018430; 044-23464575, 23464579, 23464578 மின்னஞ்சல்: aavincomplaints@gmail.com மூலம் முகவர் நியமனம் மற்றும் பால் அட்டைகளைப் பொது மக்கள் எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆகவே நுகர்வோர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு பால் வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கேட்டுக்கொள்கிறார்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …