ஹெச் யூ ஆர் எல் செயல்படுத்தவுள்ள மூன்று திட்டங்களின் முன்னேற்றம் குறித்து திரு கவுடா பரிசீலனை செய்தார்


ஹிந்துஸ்தான் உர்வரக் ரசாயன லிமிடெட் (Hindustan Urvarak & amp; Rasayan Limited – HURL) நிறுவனம் கோரக்பூர், பரோனி, சிந்திரி ஆகிய இடங்களில்செயல்படுத்த உள்ள மூன்று திட்டங்கள் குறித்து மத்திய ரசாயன உரங்கள் துறை அமைச்சர் திரு. டி. வி. சதானந்த கவுடா இன்று புதுதில்லியில் பரிசீலனை செய்தார்.

இந்த மூன்று திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஹெச் யு ஆர் எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. அருண்குமார் குப்தாவிளக்கமளித்தார். கோரக்பூர், சிந்திரி, பரோனி ஆகிய திட்டங்கள் முறையே 80%, 74%, 73 சதவிகித முன்னேற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டார். பொதுமுடக்கம், பயணம் மேற்கொள்வதற்கான தடைகள், தொழிலாளர்கள் கிடைக்காத நிலை, போன்ற பல்வேறு காரணங்கள் காரணமாக இந்தத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது நிலைமை மேம்பட்டு, போதுமான அளவு பணியாளர்கள் உள்ளனர். எனினும், கோவிட்டுக்கு முந்தைய காலத்தில் இருந்த பணியாளர் அளவை விட 20 சதவீதம் குறைந்த அளவிலான பணியாளர்களே உள்ளனர். இவர்களைக் கொண்டு மூன்று இடங்களிலும் உள்ள திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கோவிட்காரணமாக ஏற்பட்ட தாமதங்களை ஈடு செய்யும் வகையில் சவாலாக நினைத்து திட்டங்களைத் துரிதமாகச் செய்து முடிக்கத் திட்டம் தீட்ட வேண்டும் என்று திரு.கவுடா கூறினார்.

பயணக் கட்டுப்பாடுகள் இன்னும் சில காலத்திற்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் வெளிநாடுகளில் உள்ள ஆலோசகர்களுடன் காணொளி மாநாடு மூலமாக கலந்தாலோசிக்கலாம் என்று அவர் ஆலோசனை தெரிவித்தார். இந்த மூன்று இடங்களிலும் திட்டப்பணிகளைத் தொடங்குவதற்காக ஹெச் யு ஆர் எல் நிர்வாகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்த மூன்று திட்டங்களும் செயல்படத் துவங்கினால் யூரியா உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தி 38.1 லட்சம் மெட்ரிக் டன் அதிகரிக்கும். இதையடுத்து யூரியா உற்பத்தியில் இந்தியா சுயசார்பு அடைவதை அதிகரிக்க முடியும்.