ராணுவ மருத்துவக் கல்லூரி பங்களிப்புடன் நேர்மறை மன ஆரோக்கியத்தை உருவாக்குவதற்கான எளிய வழிகாட்டியை வெளியிட்டது அறிவியல் துறை முதன்மை ஆலோசகர் அலுவலகம்

இந்திய அரசின் அறிவியல் துறை முதன்மை ஆலோசகர் அலுவலகம், ராணுவ மருத்துவக் கல்லூரியின் பங்களிப்புடன் “ஒன்பது எளிய வழிகளில் நேர்மறை மன ஆரோக்கியத்தை உருவாக்குதல்: ஆரோக்கிய வாழ்வுக்கு சிறப்பான பழக்கங்கள்”  என்ற தலைப்பில் வழிகாட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது. காட்சிகளுடன் கூடிய வழிகாட்டியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை முறைத் தேர்வுகள் மற்றும் நேர்மறை மன ஆரோக்கியத்துக்கு இடையிலான தொடர்புகளை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய உதாரணங்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மக்களை சென்றடையும் வகையில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் (மற்ற பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்பட உள்ளது)  இப்போது இந்த வழிகாட்டி வெளியிடப் பட்டுள்ளது.

அறிவாற்றல், உணர்வுகள், சமூக மற்றும் உடலியக்கச் செயல்பாடுகளில் மன ஆரோக்கியத்தின் தாக்கம் இருக்கிறது. மன ரீதியில் ஆரோக்கியமாக இருக்கவும், ஒட்டுமொத்த நலனைப் பராமரிக்கவும், சவால்களைத் தாங்கும் தன்மைகளை வளர்த்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை தனிநபர்கள் எடுக்கலாம். மன ஆரோக்கியக் குறைபாடுகளை ஒருபோதும் புறக்கணித்துவிடாமல், சிகிச்சைக்கான ஆலோசனை கோர வேண்டும் என்று ஊக்குவிப்பதாக இந்த வழிகாட்டி உள்ளது.

மன ஆரோக்கிய பாதிப்பு ஏற்பட்டவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்படக் கூடும் என்ற தயக்கத்தின் காரணமாக, அவர்கள் அதை ஒப்புக்கொள்ளவோ அல்லது தேவையான சமயத்தில் உதவி கேட்கவோ முன்வருவதில்லை. மன ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவது வழக்கமானது தான் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. அறியாமை மற்றும் தவறான எண்ணம் காரணமாகத்தான் புறக்கணிப்புகள் நிகழ்கின்றன என்றும், அதனால் தான் மன ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு ஆளானவர்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் இந்த வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன ஆரோக்கியத்தை உருவாக்குதல் மற்றும் பராமரித்தலுக்கு மேற்கொள்ள வேண்டிய எளிமையான நடவடிக்கைகளை, அறிவியல் ஆதாரங்களுடன் கூறி, தனிநபர்களை ஊக்குவிப்பதாக இந்த வழிகாட்டி அமைந்திருக்கிறது.