2019ஆம் ஆண்டுக்கான வீர , தீர செயலுக்கான ஜீவன் ரக்ஷா பதக் விருது


ஆர். ஸ்ரீதருக்கு வீர , தீர செயலுக்கான 2019 – ஆம் ஆண்டுக்கான “ ஜீவன் ரக்ஷா பதக் ” விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி K. பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய 6 நபர்களை மீட்டதற்காக , தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர். ஸ்ரீதருக்கு வீர , தீர செயலுக்கான 2019 – ஆம் ஆண்டுக்கான “ ஜீவன் ரக்ஷா பதக் ” விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கௌரவித்தார்.

நீரில் மூழ்கி விபத்து , தீ விபத்து , மின்சார விபத்து , நிலச் சரிவுகள் , விலங்குகளால் தாக்கப்படுதல் மற்றும் சுரங்க விபத்து போன்ற அபாயகரமான விபத்துக்களில் சிக்கியவர்களின் உயிர் மற்றும் உடைமைகளை காக்க தைரியமாகவும் , மன வலிமையுடனும் விபத்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்திய அரசால் “ ஜீவன் ரக்ஷா பதக் ‘ என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது பதக்கம் , சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையைக் கொண்டதாகும். தஞ்சாவூர் மாவட்டம் , ஒரத்தநாடு வட்டம் , ஒக்கநாடு மேலையூர் கிராமத்தில் உள்ள வெள்ளையன் ஏரியில் குளிக்கச் சென்ற மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் ஏரியின் ஆழமான பகுதியில் சிக்கி உயிருக்கு போராடிய நிலையில், அவ்வழியாக சென்ற ஆர். ஸ்ரீதர் அவர்கள் , நீரில் சிக்கியவர்களை ஒவ்வொருவராக ஏரியின் கரைக்கு இழுத்து சென்று ஆறு பேரையும் காப்பாற்றினார்.

நீச்சலில் எவ்வித முறையான பயிற்சியை பெறாத நிலையில், 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளின் உயிரை காக்க தனது உயிரைப் பணயம் வைத்து ஆர்.ஸ்ரீதர் அவர்கள் காப்பாற்றியுள்ளார். இவ்வீர, தீர செயலுக்காக தமிழ்நாடு அரசு 2019 – ஆம் ஆண்டுக்கான “ ஜீவன் ரக்ஷா பதக் ” விருதுக்கு இவரது பெயரை மத்திய அரசிற்கு பரிந்துரை செய்தது . இப்பரிந்துரைக்கு இந்தியக் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் இன்று ஆர் . ஸ்ரீதர் அவர்களுக்கு 2019 – ஆம் ஆண்டுக்கான “ ஜீவன் ரக்ஷா பதக் ” விருதிற்கான பதக்கம், சான்றிதழ் மற்றும் 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி கௌரவித்தார்கள் .

இன்றையதினம் “ ஜீவன் ரக்ஷா பதக் ‘ விருது பெற்ற ஆர் . ஸ்ரீதர் அவர்கள் , 2019 – ஆம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது , தமிழ்நாடு அரசின் வீர , தீர செயலுக்கான அண்ணா பதக்கத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின்போது , தலைமைச் செயலாளர் க. சண்முகம் , இ.ஆ.ப. , பொதுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப . செந்தில் குமார் , இ.ஆ.ப. , பொதுத்துறை துணைச் செயலாளர் ( மரபு ) திரு . ஏ.ஆர் . ராஹுல்நாத் , இ.ஆ.ப. , மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

திரு.அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள்!… ஓ.பி.எஸ் வாழ்த்து!…
நாளை (09.10.2020) பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு.அன்புமணி …
தமிழ் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி!…
கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ் வழி பள்ளிகளை திறக்க வேண்டும்- கர்நாடக மாநில முதல்வருக்கு முதல்வர் …