கிறித்தவர்கள் ஜெருசலேம் பயணம் மேற்கொள்வதற்கு தமிழக அரசின் நிதி உதவி வழங்கும் திட்டம் 2019-2020

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிறித்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20,000/-(ரூபாய் இருபதாயிரம் மட்டும்) நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் அனைத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறித்தவர்கள் புனித பயணம் மேற்கொள்ளலாம். இதில் 50 கன்னியாஸ்திரிகள் | அருட்சகோதரிகளுக்கு புனித பயணம் மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும்.

இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறித்தவ மத தொடர்புடைய பிற புனித ஸ்தலங்களையும் உள்ளடக்கியது. பயணக்காலம் 10 நாட்கள் வரை இருக்கும்.

இதற்கான விண்ணப்பப்படிவம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்து எந்தவித கட்டணமின்றி பெறலாம். தவிர, www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பப்படிவத்தை படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பம் அனைத்தும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் “கிறித்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவிகோரும் விண்ண ப்பம் 2019-20” என்று குறிப்பிட்டு இயக்குநர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை -600 005 என்ற முகவரிக்கு 28.02.2020-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்புதல் வேண்டும். (நேரில் வர வேண்டியதில்லை) மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்.044-25241004 மற்றும் சிறுபான்மையினர் நல இயக்குநரக தொலைபேசி எண்.044-2852003-ல் தொடர்புகொள்ளலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி.ஆர்.சீத்தாலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை -01

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *