அகரமுதலி இயக்ககத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாநிலப் போட்டிகள்

தமிழ்நாடு அரசு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்

அகரமுதலி இயக்ககத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாநிலப் போட்டிகள்

வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில் 28.2.2020ஆம் நாளன்று தமிழ் அகராதியியல் நாள் விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான சொல்லாக்கப் போட்டியும் ஓவியப்போட்டியும் நடைபெற்றன. இவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000/-மும் இரண்டாம் பரிசாக ரூ.5000/-மும் வழங்கப்பட்டன.

தமிழ் அகராதியியல் அமைப்பு முறைக்கு முன்னோடியாக விளங்கிய வீரமாமுனிவரின் பிறந்த நாளான நவம்பர் 8ஆம் நாளை ஆண்டுதோறும் தமிழ் அகராதியியல் நாளாகக் கொண்டாடவும் அதனை முன்னிட்டு, பன்னாட்டுக் கருத்தரங்கம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் நடத்தவும் அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணைக்கிணங்க கடந்த 8.11.2019 ஆம் நாள் சென்னை எத்திராசு மகளிர் கல்லூரியில் தமிழ் அகராதியியல் நாள் தொடக்க விழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக 28.2.2020 வெள்ளியன்று செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் சார்பில் சென்னை தரமணியில் உள்ள மையத் தொழில்நுட்பப் பயிலகக் கருத்தரங்கக் கூடத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான சொல்லாக்கப் போட்டியும் ஓவியப் போட்டியும் நடைபெற்றன. சொல்லாக்கப்போட்டி

இன்றைய கணினி உலகத்தில் நாள்தோறும் பல துறைகள் புதிது புதிதாக வளர்ந்து வருவதால் துறைகள் சார்ந்த சொற்களுக்கு இணையான தமிழ்க்கலைச் சொற்களை வடிவமைத்து வழங்குவது தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான முதன்மைப் பணிகளில் ஒன்றாக உள்ளது.

எனவே தமிழ்க் கலைச் சொல்லாக்கம் குறித்த புரிதலை மாணவர்களிடம் ஏற்படுத்தி அதன் மூலம் தமிழின் சொல்வளத்தைப் பெருக்குவதற்கு வகைசெய்யும் நோக்கில் பள்ளி மாணவர்களுக்குக் கலைச்சொல்லாக்கப் போட்டி நடத்தப்பட்டது.

சொல்லாக்கப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் கொடுக்கப்பட்ட ஆங்கிலச் சொற்களின் பொருளறிந்து அதன் செயல், வடிவம் உள்ளிட்டவற்றை உணர்ந்து அதனடிப்படையில் பொருத்தமான தமிழ்க் கலைச்சொற்களைத் தந்து தங்களின் இரு மொழிப் புலமையைப் பறைசாற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *