கடற்கரை நகரம் – Part 1

கடவுளின் படைப்பு மனிதன் என்பார் ஆன்றோர். அப்படியிருக்க மனிதன் தன் திறமையால் படைத்த படைப்புகள் தான் எத்தனை எத்தனை? சுய நலம் கருதியோ அன்று பொது நலம் விரும்பியோ இந்த மனிதன் செய்த காரியங்கள் தான் எத்தனை, அப்படியான ஒரு மனித பிரம்மாவை என் கதாநாயகனாக முன் மொழிந்து இக்கதையை தொடர்கின்றேன்.

மகாதேவன் முனியாண்டி

வானத்து தேவதை

மாலை நேரம் பொய்யா மழை பொழியும் என காத்திருந்த வேலையில், வானத்து தேவதையாய் அவள் நடந்து வந்தாள். கடற்கரை மணலில் அடி மேல் அடி எடுத்து நடந்து வந்தாள். வாலிப கண்கள் மட்டும் ஏக்கங் கொள்ள செய்யாது, அவர்களது காதலிகளும், பொறாமை கொள்ளும் விதமாக தங்க பதுமையாக நடந்து வந்தாள்.
கடல் அலைக்கூட அவள் பூபாதம் தொட்டு விட மாட்டோமா என்று மோதி, மோதி ஏக்கத்தால் திரும்பி கொண்டிருந்தது. முயன்று அவள் பதம் தொட்ட மகிழ்ச்சியால் வெண்நுரை பரப்பி சென்றது.

சூரியனும், தன் மாலை வெயில்க்கூட அவள் மேனியை பாதித்து விடுமோ என்று பயந்து, அவள் குளிரும் பொருட்டு சந்திரனுக்கு ஆணையிட்டு அவ்விடத்தை விட்டு விலகி சென்றான். சந்திரனோ அவளை காணக் கிடைத்த அதிர்ஷ்டம் எண்ணி வெளிச்சத்தை கொட்டி மகிழ்ந்தான்.

அழகே உருக்கொண்ட அவளது முகம் அங்கிருந்த அனைவரின் கவனத்தையும் காந்தமாய் ஈர்த்து நின்றது.

பெண்மையின் இலக்கணம் யாதென தேடினால், அவை யாவிற்கும் விடையளிக்கும் விதமாக அவள் தோற்றமிருந்தது. அவள் உடுத்தியிருந்த உடையும், ஆபரணங்களையும் பார்க்கும் போது இவள் எந்த தேசத்து இராணியாய் இருப்பாள், இங்கு ஏன் வந்தாள் என எண்ணம் கொள்ள செயதது.

நம் தமிழகத்து பண்பாடான, பட்டு புடவையால் அழங்கரித்து வந்திருந்தாள். காற்றில் ஆடுகின்ற அவள் முந்தானையை பார்க்கும் பொழுது, மயில் தோகை விரித்தாடுவதற்க்கு ஒத்திருந்தது.

படிய தலைவாரி, அதில் மல்லிகை பூவொன்றை சுடியிருந்தாள். அழகாய் பின்னலிட்ட கருங்கூந்தலில் அலங்காரமாய் ஒரு தலைமாட்டியும் மாட்டியிருந்தாள். வகுடு எடுத்த நெற்றியில் நெற்றிசுட்டியொன்றை சூடியிருந்தாள். பட்டும் படாமல் குங்குமம் திலகம் ஒன்றை இட்டிருந்தாள். அவளது மேனியில் சந்திரன் ஒளி பட்டு அவளது நிறம் கண்ணாடி இழை போல் மினு மினுத்தது. சீர்மையான புருவ கோடுகள், சிறிய கண்கள், குவிந்த கன்னம், கூர்மையான நாசி, செவ்விதழ், செதுக்கிய தாடை, இவை மொத்தமாய் அவள் முகம் சிற்பமாய் காட்சியளித்தது. அவள் அங்கம் ஒன்றும் சலனத்தை ஏற்படுத்தா வண்ணம் நேர்த்தியாய் உடை அணிந்திருந்தாள். அவள் மெல்லிடைக் கூட வெளியே தெரியாது, புடவையை இருக்க சொருகியிருந்தாள்.

அழகும், அமைதியும் குடி கொண்டிருந்த அவளது முகத்தில் சோகத்தின் சாயல் தவிர வேறொன்றயும் காண முடியவில்லை.

அவள் முகத்தை கண்டதும், அங்கு சுற்றியிருந்தவர்கள் தங்களுக்குள் சலசலத்து கொண்டிருந்தனர்.

அவர்களது சலசலப்பிற்கு காரணம் என்னவாகயிருக்கும் என அறிய முயன்றாள். தன் அலங்காரம் தான் அவர்களது பேச்சுக்கு காரணம் என தனக்குள் றொரு முடிவுக்கு வந்தாள். இன்று ஏன் நம் இப்படியாக அழங்கரித்து கொண்டோம் என தன்னிலை அறிய முயன்றாள். தன்னந்தனியாய் நின்றிருக்கும், அவள் நினைவில் ஒரு முகம் தோன்ற, அவளது முகத்தில் சோகம் முழுவதுமாய் மறைத்து கொண்டது.

அவர் எங்கிருப்பார்?

தொடரும்….

Advertisement:

One thought on “கடற்கரை நகரம் – Part 1”

  1. அழகியின் வர்ணிப்புடன் அழகிய ஆரம்பம்.
    அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *